‘ரூம் பாய்’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா!

Room Boy Movie Music and Trailer Launch Ceremony

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”

அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். 
 
ஏலகிரியில் உள்ள ஸ்டார்  ஓட்டல் ஒன்றில் ஹீரோ, ரூம் பாயாக பணிபுரிகிறார். ஒரு நாள் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அதே நேரத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தான்  கதை. ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 
 
ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 
 
இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..,
 
“இந்த விழாவிற்கு வரும் போது மனதில்,  நல்ல உணர்வுகள் எல்லாம் கலந்து என் மனசில் ஓடிக்கொண்டே இருந்தது.  தயாரிப்பாளருக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது.
 
அவர்கள் என்னிடம் வந்து படத்தைப் பற்றி பேசும்போது நான் கேட்டேன் – ‘இந்த படத்துக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள்?’ என்று. அதற்கு அவர்கள் ‘கோடிகளில் நிறைய செலவு செய்திருக்கிறோம்’ என்று சொன்னார்கள். அதற்கு நான் சொன்னேன் – ‘இன்றைய காலக்கட்டத்தில் நீங்கள் நிறைய செலவு செய்திருக்கிறீர்கள். ஆனால் அந்த அளவுக்கு படத்தில் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும்’ என்றேன்.
 
பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான படமாக இது இருக்கும் என்று முன்னோட்டத்திலும் பாடல்களிலும் தெளிவாக தெரிகிறது. நிகில் நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் மிகச்சிறப்பாக செய்துள்ளார்.  இப்படம் அனைவருக்கும் பெரிய வெற்றியை தர வாழ்த்துக்கள். 
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்  தமிழ் குமரன் பேசியதாவது..,
 
“இன்று காலையில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியமான பலர் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினோம். தமிழ் சினிமா எந்த திசையில் செல்ல வேண்டும், அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற பல முக்கியமான முடிவுகள் அந்த சந்திப்பில் எடுக்கப்பட்டன, “குறிப்பாக சின்ன படங்களுக்கு தியேட்டர்களில் தேவையான முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதையும் இன்று பேசினோம். அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் சில முக்கியமான நடைமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்,”
 
புதிதாக சினிமாவுக்கு வரும் இளம் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சில வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 
இந்த ‘ரூம்பாய்’ திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லர் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது  படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி. 
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..
 
அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வணக்கம். “ரூம்பாய்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட வேண்டும் என்று கூறிய போது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சார் உடனே ஒப்புக் கொண்டு அதை வெளியிட்டார். ஒருவர் செய்யக்கூடிய உதவியை நாம் அவர்களை ஊக்குவித்து, பாராட்டி மகிழ்ந்தால்தான் அடுத்ததாக பத்து பேரும் அதுபோன்ற உதவிகளை செய்ய முன்வருவார்கள். அந்த நாகரிகமான மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சாருக்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் ஒரு சினிமா படத்திற்கு ஒரு செலிபிரிட்டி இப்படியாக ஆதரவு அளித்தால், அந்த படம் பல கோடி மக்களிடம் சென்று சேரும். அதற்கும் மேலாக, அந்த படத்திற்கு ஒரு பெரிய கவனமும் கிடைக்கும்.
 
இதற்கு ஒரு உதாரணம் சொன்னால், “தாய்கிழவி” படத்தை வேறு எந்த தயாரிப்பாளர் எடுத்திருந்தாலும் இவ்வளவு பெரிய மார்க்கெட்டிங் கிடைத்திருக்காது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக இருந்து தயாரித்ததோடு, அந்த படத்தில் ஒரு பாடலும் பாடினார். அந்த படத்தின் பிரமோஷனுக்காக அவர் முழுமையாக பாடுபட்டார். அதனால்தான் அந்த “தாய்கிழவி” படம் பெரிய அளவில் எளிதாக மக்களிடம் சென்றது.
 
அதேபோல், “ரூம்பாய்” என்ற இந்த தலைப்பை வெளியில் அறியச் செய்ய உதவிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சாருக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.“ரூம் பாய் ” என்ற தலைப்பைப் பார்த்தாலே அனைவருக்கும் தொடர்புடையதாக இருக்கும். ஒரு ஹோட்டலில் தங்கும் போது பல விதமான மனிதர்கள் வருவார்கள். அந்த ஹோட்டலில் நடக்கும் பல கதைகள் இருக்கும். அந்த பல கதைகளையும் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இந்த படத்தில் “ரூபாய்” என்ற பாத்திரம் இருக்கும்.
 
இதில் இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்த படத்தின் தயாரிப்பாளர் சூரிய கலா சந்திர மூர்த்தியின் மகன் தான் கதாநாயகன் நடித்துள்ளார்,அவருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இது அவருடைய முதல் படம். அவருக்கு வாழ்த்துக்கள்.
 
ஒரு தயாரிப்பாளர் படம் செய்யும் போது, 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு தருகிறார். ஆனால் கதையை அவர் தேர்வு செய்வதில்லை. ஆனால் படம் தோல்வியானால் அவர் தான் தெருவில் நிற்கிறார். ஆனால் இதே ஆந்திராவில் ஒட்டுமொத்த நடிகர்களும் தயாரிபாளரை காப்பாற்றுகிறார்கள். தமிழ் நாட்டில் அந்த நிலைமை சுத்தமாக இல்லை. சூப்பர்ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளருக்கு உதவுவதில்லை. ஆந்திராவில் வந்து நிற்கிறார். இங்கு 30 சதவீதம் தான் தயாரிப்புக்கு செலவாகிறது. 70 சதவீதம் ஹீரோ சம்பளம் ஆனால் படம் தோல்வியானால் அவர் வருவது இல்லை. இங்கு நிறைய தவறுகள் நடக்கிறது. எல்லா தயாரிப்பாளர்களும் உங்கள் கமபெனியை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யுங்கள் தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் நிற்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்  ராதா கிருஷ்ணன் பேசியதாவது.., 
 
‘ரூம் பாய்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் முடிந்த பிறகு நடைபெறும் முதலாவது நிகழ்ச்சியாக இந்த விழா அமைந்துள்ளது. இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். 
 
இன்றைக்கு திரை உலகம் எந்த சூழ்நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். மிகப் பெரிய சவால்களும் இக்கட்டான சூழ்நிலைகளும் நிலவுகின்றன. அந்த சூழ்நிலையிலிருந்து தமிழ் திரையுலகத்தை மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இங்கே மேடையில் இருக்கிற திரையுலக ஜாம்பவான்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உள்ளது.
பல சவால்களை தாண்டி தமிழ் திரையுலகம் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இன்று காலையிலேயே டிஸ்ட்ரிப்யூட்டர்கள், எக்ஸிப்யூட்டர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து மிக முக்கியமான ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தோம்.” அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இனிமேல் எந்த ஒரு பெரிய ஹீரோவாக இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞராக இருந்தாலும், அட்வான்ஸ் வாங்கினால் அந்த தயாரிப்பாளருக்கு தான் முன்னுரிமை தர வேண்டும். தயாரிப்பாளர்கள் வலுவாக இருந்தால் ஒற்றுமையாக இருந்தால், சினிமா சிறக்கும் என எல்லோரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். மிக விரைவில் தயாரிப்பாளர் சங்கம் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழ் சினிமாவை சீர்படுத்தும். ரூம் பாய் படம் பெரும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
 
‘ரூம் பாய்’  படத்தின்  இயக்குநர் ஜெகன் ராயன் பேசியதாவது.., 
 
“நிறைய பேச மாட்டேன்… திரைப்படத்தில்தான் பேசுவேன்.  “இந்த ஒரு நாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த கனவு இன்று நனவாகியுள்ளது” இந்த இசை வெளியீட்டு விழாவை தனது தந்தை என்.வி. சுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன், “என் மகன் ஒருநாள் இயக்குநராக வருவான் என்று அவர் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார்”. 
 
அவரின் ஆதரவில்  இயக்குநர் படிப்புக்கு பதிலாக Sound Engineering and Recording படிப்பு படித்து  2004 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கத்தில் மாநில விருதை பெற்றேன்.
 
“சினிமா ஒரு கடல். அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் சிலர். மூழ்கிப் போகிறவர்கள் பலர். இருந்தாலும் எனக்குள் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது”.  பல வருட போராட்டத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து படம் எடுக்க உதவி கேட்டேன், ஆனால் அவர் அதற்கு பதிலாக தனது மகனை வைத்து படம் எடுங்கள் என்றார்.“எனக்கு தோல்வி வந்து ரொம்ப பழசு. நிறைய தோல்விகளை சந்தித்த பிறகுதான் இன்றைய நிலையை அடைந்தேன். ஆனால் நீங்கள் வெற்றி பெற வேண்டும்” என்று தயாரிப்பாளர் கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. படப்பிடிப்பு முழுவதும் தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்தார், அதனால் தான் என்னால்  இந்த திரைப்படத்தை சிறப்பாக  உருவாக்க முடிந்தது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.  குறிப்பாக ஒளிப்பதிவாளர் பாரதி, கவிஞர் சூரியமூர்த்தி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி. “இந்த படம் எங்களுக்கு அனைவருக்கும் ஒரு பெரிய பயணம். நிச்சயமாக இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” அனைவருக்கும் நன்றி.
 
Room boy Audio & Trailer Launch photos Downloads Link -  https://sendgb.com/cAWi0QzUewd

Tags: News, Hero, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top