பா.ஜ.க-வின் அடுத்த அட்டாக் ஆரம்பம்!
Posted on 05/12/2017

விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கும் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஆறுமுக குமார் இயக்கிய இந்தப் படத்தின் டீசரில், ராமாயணத்தில் வரும் ராமன் மற்றும் ராவணனைப் பற்றிய வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ராமனைப் பற்றிய வசனத்தால் பா.ஜ.க ஆதரவாளர்கள் விஜய் சேதுபதி படத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனவும், படத்தை வெளியிடக்கூடாது எனவும் கோரி வருகின்றனர்.
விஜய் சேதுபதி பல கெட்டப்புகளில் வரும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் காயத்ரி நடித்துள்ளார். சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த நடிகை நிஹாரிகாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் டீசரில் 'ராமன் நல்லவனா, ராவணன் நல்லவனா... என விஜய் சேதுபதி வசனம் பேசுவது இடம்பெற்றிருக்கிறது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"ராவணன் சீதையைத் தூக்கிட்டு வந்து கைபடாம பத்திரமா வெச்சுருந்தானா.. அவனை நாம அரக்கன்னு சொல்றோமா... ராமன் சீதையைக் காப்பாத்தி கொண்டுபோய் அவளைச் சந்தேகத் தீயில போட்டு எரிச்சானா... அவன நாம கடவுள்னு சொல்றோமா..." என வசனம் பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி. ராமனும் நான் தான் ராவணனும் நான் தான் என மிரட்டலாகச் சொல்கிறார் விஜய் சேதுபதி. ராமனை தவறாகச் சித்தரிப்பது போல இந்த வசனம் இருப்பதாக டீசர் வெளிவந்தபோதே பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பா.ஜ.க ஆதரவாளர்களின் சமூக வலைதள பக்கங்களில், ராமனை அவமதிக்கும் வகையில் வசனங்களைப் பேசும் விஜய் சேதுபதியின் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்பது போன்ற செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. அரசைப் பற்றிய விமர்சனங்கள் வசனங்களாக வந்தாலே படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வரும் நிலையில், ஆளும் கட்சியினரின் நம்பிக்கைக்கு எதிரான இந்த வசனத்தால் பெரிய பஞ்சாயத்து கிளம்பப்போவது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இது படத்திற்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Tags: News, Hero, Star