தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மறைவு
Posted on 14/12/2020

கலை இயக்குனர் மற்றும் ஆடை வடிவமைப்பாளரான கிருஷ்ணமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராகவும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் பி கிருஷ்ணமூர்த்தி.
76 வயதாகும் இவர் உடல் நலக் குறைவின் காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
பாரதிராஜாவின் 'நாடோடி தென்றல்', பாலுமகேந்திராவின் 'வண்ண வண்ண பூக்கள்' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிய இவர் சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றவர். இயக்குனர் ஞானராஜசேகரன் இயக்கத்தில் தயாரான 'பாரதி' படத்தின் மூலம் பிரபலமான இவர் சரித்திர, இதிகாச, புராண மற்றும் நூற்றாண்டுக்கு முன்னர் காலகட்டத்திய படங்களில் கலை இயக்கத்திற்காக பணியாற்றி சிறப்பு கவனம் பெற்றவர்.
இதனிடையே இவர் தன் வாழ்வின் இறுதி காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வந்ததாகவும், குறிப்பாக கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலகட்டங்களில் மற்றவருடன் தொடர்பின்றி ஏராளமான பொருளாதார மற்றும் ஆரோக்கிய சிக்கலுக்கு ஆளானதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு இன்று சென்னையில் நடைபெறுகிறது. திரையுலகில் அவருடன் பணியாற்றியவர்கள் நண்பர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.