இரண்டே படங்களில் நடிப்புக்கு முழுக்கு போட்ட தனுஷ், சிம்பு பட ஹீரோயின்!
Posted on 24/10/2017

நடிகர் தனுஷுடன் செல்வராகவன் இயக்கத்தில் 'மயக்கம் என்ன', சிம்புவுடன் 'ஒஸ்தி' என இரண்டே இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாயா. இரண்டே படங்களில், அதுவும் ஹிட் ஆகாத படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய கிளாமரான தோற்றத்தால் எக்கச்சக்க ரசிகர்களைக் கவர்ந்தார் ரிச்சா.
தமிழில் ரிச்சா கங்கோபாத்யாயா நடித்த படங்கள் வெளிவந்து ஆறு வருடங்கள் ஆகப் போகின்றன. அதன்பின் தெலுங்கில் பிரபாஸ், ரவி தேஜா, நாகார்ஜுனா ஆகியோரது படங்களில் நடித்தார் ரிச்சா. இப்போதும் தமிழ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் நடிகையாகவே இருக்கிறார் ரிச்சா.
நான்கு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் எம்.பி.ஏ படிப்பதற்காகச் சென்றவர் தற்போது படிப்பையும் முடித்துவிட்டார். ட்விட்டரில் இருக்கும் அவரை அவ்வப்போது ரசிகர்கள் எப்போது மீண்டும் நடிக்க வருவீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நேற்று ட்விட்டரில் கடுமையான வார்த்தைகளுடன் இனி நிச்சயம் நடிக்க வர மாட்டேன் எனச் சொல்லியிருக்கிறார்.
திரைப்படங்களில் நடிப்பதை விட்டு வெளியே வந்து ஐந்து வருடங்கள் ஆன பின்னும் என்னுடைய அடுத்த படம் என்ன என்று கேட்பவர்களுக்கு, கூகுள் உங்கள் நண்பன் தானே, அதோடு, Pinned tweet பாருங்க. எனக் கூறியிருக்கிறார்.
நான் வாழ்க்கையின் புதிய பகுதியில் இருக்கிறேன். அதில் நடிப்பதற்கான லட்சியம் எதுவும் இல்லை. நான் பதில் சொன்ன பிறகும் நான் என் மனதை மாற்றிக் கொள்வேன் என எதிர்பார்ப்பவர்களுக்கு நான் நடிக்க வரமாட்டேன் என சத்தியம் செய்கிறேன்.
நடிப்பை விட்டதால் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேனா என்று பலர் கேட்பது அழகாக வெறுப்பூட்டுகிறது. வாழ்க்கையில் திருமணத்தைத் தவிர வேறு லட்சியங்கள் இருக்கக் கூடாதா? என்றும் அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மீண்டும் நடிக்க வருவீர்களா என ரசிகர்கள் கேட்டதற்கு வெறுப்பாக பதிலளித்த ரிச்சா, அவருடைய ட்விட்டரின் பயோவில் 'முன்னாள் இந்தியத் திரைப்பட நடிகை' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Tags: News, Hero, Star